86. அருள்மிகு திருமூழிக்களத்தான் கோயில்
மூலவர் திருமூழிக்களத்தான்
தாயார் மதுரவேணி நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் பெருங்குளம், சங்க தீர்த்தம்
விமானம் சௌந்தர்ய விமானம்
மங்களாசாசனம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருமூழிக்களம், கேரளா
வழிகாட்டி எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் உள்ள அங்கமாலி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirumoozhikalam Gopuram Tirumoozhikalam Moolavarஇக்கோயிலை 'லக்ஷ்மணன் கோயில்' என்று அழைக்கின்றனர். ஹரீத மகரிஷி உலக மக்களின் நன்மைக்காக திருமாலை நோக்கி தவமிருந்தார். பகவான் அவர்முன் பிரத்யக்ஷமாகி, அனுஷ்டான பிரகாரங்களையும், யோகத்தையும் - திருமொழியைக் கூறியதால் 'திருமொழிக்களம்' என்ற பெயர் ஏற்பட்டது என்று புராணம் கூறுகிறது. காலப்போக்கில் 'திருமூழிக்களம்' என்று மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ராமபிரான் தனது வனவாசத்தின்போது சித்திரக்கூடத்தில் தங்கியிருந்தபோது, அவரை மறுபடியும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல பரதன் அங்கு வந்தான். லக்ஷ்மணன் இதைத் தவறாக எண்ணி அவனுடன் போரிட்டு, பின்னர் தனது தவறை உணர்ந்தான். அப்போது பரதன் அன்புமொழிக் கூறி அவனை அணைத்துக் கொண்டான். இன்சொல் கூறியதால் 'திருமொழிக்களம்' என்று அழைக்கப்படுவதாகக் ஸ்தல வரலாறு கூறுகிறது. தற்காலத்தில் 'திருமூழிக்களம்' என்று மாறியது என்பர்.

மூலவர் திருமூழிக்களத்தான் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு மதுரவேணி நாச்சியார் என்பது திருநாமம். ஹரீத மகரிஷிக்கு பகவான் பிரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 14 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com